kerala

CAAக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கேரள இடது முன்னணி அரசு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலாக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது சில இந்துத்துவ மற்றும் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட குண்டர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது தேசம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது.

இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சூழ்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் என்பது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி CAA -வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதல் அரசாக கேரளம் வழக்கு தொடர்ந்துள்ளது.

-seithikkural