திருநெல்வேலி இருட்டுக்கடையை மீண்டும் திறந்த பேரன்..தாத்தாவின் கடை இது.. விடமாட்டேன்..

திருநெல்வேலி: உலக புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அப்பகுதி மக்கள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

திருநெல்வேலியில் இருக்கும் இருட்டுக்கடை அல்வா கடை உலகம் முழுக்க பிரபலம் ஆகும். 1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டது இந்த கடை.

இந்த நிலையில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து மனஅழுத்தம் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலியை இந்த செய்தி உலுக்கியது.

இதனால் மீண்டும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை திறக்குமா என்று கேள்வி எழுந்தது. ஏனென்றால் ஹரி சிங் இருந்தவரை அவரின் வீட்டு உறுப்பினர்கள் பெரிதாக கடைக்கு வந்தது இல்லை. அவர்கள் பெரிதாக கடையை கவனித்துக் கொண்டது இல்லை. இதனால் தொடர்ந்து இருட்டுக்கடை செயல்படுமா என்று கேள்வி எழுந்தது. பலரும் இது குறித்து விசாரிக்க தொடங்கினார்கள்.

இந்த நிலையில் உலக புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அப்பகுதி மக்கள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஹரி சிங்கின் பேரன் சூரத் சிங் கடையை திறந்து இருக்கிறார். நேற்று மாலை இவர் கடையை மீண்டும் திறந்தார். இனி கடை பொறுப்பை அவரே கவனித்துக் கொள்வார் என்கிறார்கள்.

இது தொடர்பாக சூரத் சிங் தெரிவிக்கையில், இது குடும்பம் நடத்திய கடை. என் தாத்தா கவனித்துக் கொண்ட கடை. அவர் மிகவும் சுத்தமாக நேர்மையாக கடையை நடத்தினார். அவருக்கு அடுத்து நானும் அவரை போல கடையை நடத்த வேண்டும். கடையை தொடர்ந்து நடத்துவேன், விட்டுவிட மாட்டேன். அதே சுவையுடன் கடையை தொடர்ந்து நடத்துவேன் என்று சூரத் சிங் கூறியுள்ளார்.

கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த கடைக்கு மக்களை கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். மாலை ஐந்தரை மணிக்கு இருட்டுக்கடை திறக்கப்படுகிறது. 2 மணி நேரம் கடை திறந்து இருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்று தீர்ந்து விட்டது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அல்வாவை வாங்கி சென்றனர் .