கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் , நேரில் பார்வையிட்டார்…

ஆதனூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் ஆதனூர் கிராமம் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (08.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்கறிகளை அந்த பகுதிகளிலே கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்போது தினம்தோறும் புதிய முகமூடிகளை அணிந்து பணியாற்றுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிவதற்கு ஏதுவாக சோதனை சாவடிகள் அமைக்கபட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளது. ஏற்கனவே கரோனா தொற்று நோயினால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்த 26 நபர்கள் வீடு திரும்பி உள்ளார்கள். கடந்த 2 தினங்களாக 3 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதிகள் கரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளி வரவும், வெளியில் இருந்து பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு செல்வதையும் அனுமதி அளிப்பது இல்லை. இன்று கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் வட்டம் ஆதனூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள 56 வீடுகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டி தனிமைப்படுத்தபட்டது. மேலும் 82 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் அந்த பகுதிகளில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட நபர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருந்து வெளி வராமல் இருக்க அலுவலர்கள் மூலம் தொடர்ந்து தெரிவிப்பதோடு கண்காணிக்கபட்டு வருகிறது.

ஆதனூர் ஊராட்சி தலைவர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருந்து வெளி வராமல் இருக்க கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் புதிதாக எந்த ஒரு பணிகளையும் துவக்க அனுமதி இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளும் இந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைபடுத்தப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வீட்டில் இருந்து வெளிவரக்கூடாது. வீட்டில் இருந்து வெளிவரும்பட்சத்தில் கரோனா தொற்று நோய் பரவுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே குறிப்பிட்ட நாட்கள் முடிவதற்கு முன் வெளி வரும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டம் ஆதனூர் கிராமத்தில் செயல்பட்டு கொண்டிருந்த நியாய விலை கடையின் மூலம் பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வழங்கபடுவதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆய்வு செய்தார். ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கெலன்பொண்மணி, வளர்மதி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.தங்கமணி, வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் பிரிட்டன், மரு.சுதர்சன், ஆதனூர் ஊராட்சி தலைவர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.