தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர். அதே நேரத்தில் ஆவண எழுத்தர்கள் யாரும் கடைகளை திறக்கவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து ஊழியர்கள் பணியாற்றினர்.
தூத்துக்குடி பதிவு மாவட்டத்தில் 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் வழக்கமாக ஒவ்வொரு நாளும் 400-க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படும். ஆனால் நேற்று புதுக்கோட்டையில் 1, ஏரல் 2, விளாத்திகுளம் 3, புதூர் 1, பெருங்குளத்தில் 5 ஆக மொத்தம் 13 பத்திரங்கள் மட்டுமே பதிவாகி இருந்தன. இதேபோன்று காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், அங்கு பத்திர பதிவு நடைபெறாததால் வெறிச்சோடின.