ஐதராபாத், : தேர்தலில், ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை தடுக்க, முக அடையாளம் காணும் செயலியை பயன்படுத்த, தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை, 120 நகராட்சிகளுக்கும், ஒன்பது மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில், ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பவர்களை தடுக்கும் வகையில், தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம், புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது: நாட்டிலேயே முதல் முறையாக, வாக்காளர்களின், முக அடையாளம் காணும் செயலியை, தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இங்கு, மேட்சால் மால்கஜ்கிரி மாவட்டம், கோம்பல்லி நகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 வாக்குச் சாவடிகளில், முதற்கட்டமாக இந்த செயலி, பயன்படுத்தப்படவுள்ளது.
வாக்குச்சாவடிக்குள் நுழையும் வாக்காளர்களை, அங்குள்ள அதிகாரிகள், புகைப்படம் எடுப்பர். பின், முக அடையாளம் காணும் செயலியில், அந்த புகைப்படங்கள் பதிவிறக்கப்பட்டு, வாக்காளர்களின் அடையாளம் உறுதிபடுத்தப்படும். அந்த செயலியில், எதிர்மறையாக முடிவு வந்தால், வருத்தப்பட தேவையில்லை. அவர்களுக்கு, வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படாது. வாக்கு சாவடியில் எடுக்கும் வாக்காளர்களின் புகைப்படங்கள், சேமித்து வைக்கப்படாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.