தேஜாஸ் விரைவு ரயிலில் பயணிப்போர் செல்போன்கள், லேப் டாப்புகளில் தங்களுக்கு பிடித்த மொழி திரைப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை காண வை-பையை (wi fi) அடிப்படையாக கொண்ட மேஜிக் பாக்ஸ் பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர்த்து வாரத்துக்கு 6 நாள்கள் தேஜாஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ப்ரீமியம் ரக ரயிலான அதில், முதலில் பயணிகள் அமருமிடத்தில் எதிரேவுள்ள இருக்கையின் பின்பகுதியில் சிறிய டிவி போன்ற அமைப்பு இருந்தது. அது சரிவர செயல்படுவதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, அதை நீக்க உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, பிரிமியம் ரக ரயிலான தேஜாஸில் பயணிக்கும் பயணிகள் தரப்பில் இருந்து, பொழுது போக்குக்காக திரைப்படங்கள் போன்றவற்றை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை பரிசீலித்த தெற்கு ரயில்வே, பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்கள், லேப்-டாப்புகளில் திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், வை பை-யை (wi fi)அடிப்படையாகக் கொண்ட மேஜிக் பாக்ஸ் (magicbox) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தேஜாஸ் ரயிலில் பயணிப்போர் செல்போன், லேப் டாப்பில் வை-பை-யை ஆன் செய்ததும், மேஜிக் பாக்ஸ் வசதியின் சிக்னல் கிடைக்கும். அந்த சிக்னலுடன் கனெக்ட் செய்ததும், பிறகு பிரவுசர் பகுதிக்கு சென்று மேஜிக் பாக்ஸ் டாட் காம் (magicbox.com) என டைப் செய்ய வேண்டும். பிறகு தம்நெயில் பட்டனை அழுத்தியதும், அதில் பயணி தங்களது விவரத்தை ஒருமுறை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பொழுது போக்கு நிகழ்வுகளை பயணிகள் தடையின்றி கண்டுகளிக்கலாம்.
மேஜிக் பாக்ஸ் வசதியில் ஏற்கெனவே ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், சிறார்கள் விரும்பி பார்க்கும் பல்வேறு கார்டூன் நிகழ்ச்சிகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து பயணநேரத்தின்போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம்.