இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது. கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்து தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. எனினும் அதுகுறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அவை வந்த பிறகே முழு விபரங்களும் தெரிய வரும். தனது வாதத்தில் தமிழக அரசு ஆன்லைன் விற்பனை தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை ஏற்பாடு உள்ளதாகவும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என நிபந்தனையுடன் மது விற்பனை நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
