தமிழ்நாடு அளவில் பளுதூக்கும் போட்டிகள் : தூத்துக்குடி

தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம் சார்பில் மாநில அளவிலான 70வது ஆண் மற்றும் 34வது பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் தூத்துக்குடி கோரம்பள்ளம் எஸ்டிஆர் பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 வீரர்கள் 70 வீராங்கனைகள் என 130 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் சேலம் அணியினர் 242 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், வேலூர் அணியினர் 156 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சேலம் அணியினர் 262 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நாகை அணியினர் 203 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதை திருவள்ளுவரை சேர்ந்த கௌதமும், பெண்களுக்கான சிறந்த எழுத்துக்கான விருதை தூத்துக்குடி கனகவல்லியும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தலைவர் எஸ்.டி.ஆர் பொன்சீலன், அரிமா சட்ட மாவட்ட தலைவர் தெய்வநாயகம், தூத்துக்குடி டெக்டைல்ஸ் ரெடிமேட் சங்க ஆலோசகர் சந்திரசேகர், தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கத் தலைவர் ரத்னா தர்மராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இதில் மாநில பொது செயலாளர் நவராஜ் புல்கானின் டேனியல், தூத்துக்குடி மாவட்ட பளுதூக்கும் சங்கத் தலைவர் அசோக், செயலாளர் நெல்சன் பொன்ராஜ், பொருளாளர் தமிழரசன், திருச்சி சரோன் செயல் இயக்குனர் தனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பு குழுவினர் குணசேகர்,செல்வின், ஸ்ரீதர் பிரதீப், அலெக்ஸ் ஞானமுத்து, அற்புதராஜ், ஜார்ஜ் ஈஸ்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.