தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவதை கருத்தில்கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி, மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதன்படி தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணம் மற்றும் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் ‘டோக்கன்’ மூலம் இன்று முதல் விநி யோகிக்கப்படுகிறது.
மக்கள் திரள்வதைத் தவிர்க்க டோக்கன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்தக் டோக்கன்கள் மக்களின் வீட்டிற்கு சென்று கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று (02.04.20) நிவாரணம் பெறும் நபர்களுக்கான டோக்கன்கள் நேற்று வழங்கப்பட்டன. டோக்கன்கள் தெரு அல்லது வரிசை எண் வாரியாக, என கடை விற்பனையாளர்கள் தங்கள் வசதிப்படி டோக்கன்களை வழங்கினர். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் வந்து நேரடியாக பொருட்களை நியாயவிலைக் கடைகளில் வாங்கவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் பொதுமக்களுக்கு கடை விற்பனையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.