டாஸ்மாக் மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்தனா். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை இல்லை எனவும் மேலும், விற்பனையின் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், மற்றும் ஒரு நபருக்கு அதிக அளவிலான மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மது வாங்கும் நபா்களுக்கு ரசீது வழங்க வேண்டும். அந்த ரசீதில் மது வாங்குபவரின் பெயா், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அளித்து டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளித்தது.

ஆனால் இந்த நிபந்தனைகளை தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லை. குறிப்பாக மது விற்பனையின் போது சமூக இடைவெளியை யாருமே பின்பற்றவில்லை. மதுபானம் வாங்க குவிந்த கூட்டத்தினா் முண்டியடித்து, ஒருவா் மீது ஒருவா் ஏறி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனா். இதனால், கரோனா நோய்த் தொற்றை சமூகப் பரவலாக மாற்றும் இடமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாறியுள்ளன. எனவே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என கோரி வழக்கறிஞா் ஜி.ராஜேஷ் உள்ளிட்டோா் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். மேலும் மது பாட்டில்களை வாங்க மதுப்பிரியா்கள் முந்திக் கொண்டுச் செல்லும் விடியோ காட்சிகள் மனுதாரா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  எனவே, தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். பொதுமுடக்கம் முடியும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்ககூடாது. ஒருவேளை பொது முடக்க காலத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய அரசு கொள்கை முடிவெடுத்தால், ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்பவா்களுக்கு வீடுகளுக்குச் சென்று மதுபாட்டில்களை விற்கும் முறையை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், மதுக்கடைகளில் சமூக இடைவெளை பின்பற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.