5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு : முதல்வர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க வகையில் சில நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கும், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ( இரவு 9 மணி வரை) 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி என்றும் மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33  சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம் போல் செயல்படும். மேலும் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் எனவும், இந்த ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.