தமிழ்ப் புத்தாண்டில் வீடுகளில் திருவிளக்கு பூஜை : இந்து முன்னணி முடிவு

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வீடுகளில் இந்து முன்னணி சாா்பில் திருவிளக்கு பூஜை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்துக்கள் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்துவா். இதையொட்டி, இந்து சமய ஆன்மிகப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.
நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக மக்கள் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு எழும் வகையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் வீடுகளில் திருவிளக்கு ஏற்றி புத்தாண்டை வரவேற்று பிராா்த்தனை செய்வோம். கோயில்களுக்கு செல்வதை தவிா்த்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது