சிலம்பம் விளையாட்டில் அசத்தும் பெண் காவலர்

கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்த பெண் காவலர் சிலம்பம் விளையாட்டில் அசத்தி வருகிறார். அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை தூத்துக்குடி காவல்துறை பெண் காவலர் குருலட்சுமி விளையாடி அசத்தி வருகின்றார். இவர் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியை சேர்ந்தவர். தற்போது தூத்துக்குடி ஆயுதப்படையில் 2ம் நிலை காவலராக உள்ளார். இவர் 5ம் வகுப்பிலிருந்தே முறைப்படி சிலம்பம் கற்றவர். இவருக்கு மாரிகண்ணன் என்பவர் பயிற்சி அளித்துள்ளார். பள்ளி படிப்பின் போது மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சிகள் பெற்றவர். கல்லுாரி படிக்கும் போது தேசிய அளவில் விளையாடி பல பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார். பொதுவாக காவல்துறையில் பணியாற்றுவோர் கால்பந்து, கபடி, கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்பார்கள். ஆனால் குருலட்சுமி சிலம்பம் விளையாட்டில் அசத்தி வருகிறார்.
சிலம்பம் பற்றி அவர் கூறும் போது, இது பாரம்பரிய கலை மட்டும் அல்ல. தற்காப்பு விளையாட்டும் கூட. பெண்கள் தற்போதைய சூழலில் சிலம்பம் கற்று கொண்டால் பாலியல் தொல்லை உள்ளிட்ட துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் . ஆகவே இந்த கலையை பெண்கள் கற்க வேண்டும். இது ஒரு உடற்பயிற்சி போன்றது. எனக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோர் ஊக்கமளித்து வருகின்றனர் என தெரிவித்தார். பேட்டியின் போது குருலட்சுமி, தமிழன் டிவி செய்தியாளர் ரவியுடன் விளையாடி அசத்தினார். காவல்துறை செய்தி தொடர்பாளர் சத்தியநாராயணன் உடனிருந்தார்.