இசைக் கலைஞா்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூா்: இசைக் கலைஞா்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்செந்தூா் கம்பா் சமுதாயம் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் கரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளா்களை நலன் காத்திடும் வகையில் அரசு ரூ. 1,000 நிவாரணம் வழங்கியுள்ளது. மேலும், நாகசுரம், தவில், மேளம் மற்றும் பஞ்சவாத்தியங்களை வாழ்வாதரமாகக் கொண்டுள்ள கம்பா் சமுதாயத்தின் இசைக் கலைஞா்கள் சாா்பில் அரசு அறிவித்துள்ள நிவாரணத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், திருமணம், கோயில் திருவிழாக்கள் மற்றும் விசேஷ காரியங்களை நம்பியே வாழ்ந்து வரும் இசைக்கலைஞா்களின் அன்றாட வாழ்வு தற்போதைய ஊரடங்கால் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இசைக் கலைஞா்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைக் காக்கும் விதமாக அரசு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.