கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை – மகன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண நிதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ரூ.20 லட்சத்துக்கான காசோலையினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்; இறந்ததால் அவர்களது குடும்பத்திற்குதமிழ்நாடு முதலமைச்சர் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என உத்தரவிட்டு இருந்தார்.  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் இன்று நேரில் சாத்தான்குளம் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள். ரூ.20 லட்சத்துக்கான காசோலையினை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ,ஜெயராஜ் துணைவியார் செல்வராணியிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் .கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து உடனுக்குடன்  தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து காவல்துறை மூலம் துறைரீதியாக உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தோர்  குடும்பத்திற்க்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.20 இலட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  மேலும் கல்வி தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இன்று சாத்தான்குளம் .ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு  வீட்டிற்கு நேரடியாக சென்று  தலா ரூ.10 லட்சம் விதம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையினை ஜெயராஜ் துணைவியார் செல்வராணியிடம் வழங்கப்பட்டது. மேலும் கல்வி தகுதியின் அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை  தாமாகவே வழக்காக எடுத்து விசாரணை செய்து வருகிறது.

உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்று இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யும். மேலும் தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக உரிய தண்டனை கிடைக்கும் என குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். நிகழ்வில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்