மாணவியின் பேச்சால் கதறி அழுத சூர்யா!!!

அகரம் அறக்கட்டளை சார்பாக வித்தியாசம்தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக என இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் சூர்யா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் நிறுவனத்தின் கே.ஆர்.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை மூலம் படித்து பணியில் இருக்கும் காயத்ரி என்ற இளம்பெண், தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிப் படிப்பு எட்டாக்கனியாக இருந்த தனக்கு, அகரத்தின் உதவி கிடைத்தது குறித்தும் தான் சந்தித்த சவால்கள் குறித்தும் அவர் பேசினார். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், தாய் 200 ரூபாய் கூலிக்காக தனது ஊரிலிருந்து 19 கி.மீ தூரம் தஞ்சைக்குப் பயணித்து வீட்டு வேலை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாதது குறித்து தாய் வேதனை தெரிவித்ததாகவும் கூறினார்

மேலும், தனது மகள் மேடையில் பேசுவதைக் கேட்க முடியாத நிலையில், போனில் கேட்டுக்கொள்வதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது என்று கூறி போன் லைனில் காத்திருப்பதாகக் கூறினார் அந்த மாணவி.

அவர், தான் சந்தித்த சவால்கள் குறித்து பேசியபோது கண்கலங்கியபடியே கேட்டுக்கொண்டிருந்த சூர்யா, தனது தாய் குறித்து பேசுகையில் கண்ணீர்விட்டார். மேலும், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து அந்த மாணவியைத் தட்டிக்கொடுத்து ஆற்றுப்படுத்தினார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவர்களை நெகிழச் செய்தது.