கயத்தாறு ஊராட்சி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்: அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் ஆத்திகுளம் கொரோனா நோய் கட்டுபாட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 550 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (23.05.2020) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் ஆத்திகுளம் கொரோனா நோய் கட்டுபாட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 550 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி, பொதுமக்களை வீட்டில் இருந்து வெளி வராமல் இருக்க வேண்டும் எனவும், தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்திப் நந்தூரி, அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸ் கொடிய நோய் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் இந்த சுய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிற மே 31ம் தேதி வரை தொடர்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளி வர வேண்டும் எனவும், தாங்களே தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்

நமது மாவட்டத்தில் ஏற்கனவே 27 நபர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள். இதில் 26 நபர்கள் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள், ஒரு நபர் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார். பின்னர் நமது மாவட்டத்தில் 16 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்ற நிலையில் இருந்தது. தற்போது மகாராஷ்டிரா (மும்பை, தானே) குஜராத் (சூரத்) போன்ற மாநிலங்களில் மற்றும் சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நமது மாவட்டத்தை சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் திறந்து வைக்கப்பட்டது கண்டறிய முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 36 நபர்கள் பூரண குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். 2 நபர்கள் உயிரிழந்துள்ளாரகள், தற்போது 105 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு நபரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 106 நபர்களில் 91 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், 3 நபர்கள் குஜராத் மாநிலத்தில் இருந்தும், 8 நபர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் என மொத்தம் 102 நபர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்தவர்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் எளிதாக ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபரிடம் பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் முக கவசங்களை அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளி கடைபிடிப்பதோடு, தனித்திருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பொதுமக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றும் போது தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறியும் வகையில் சோதனைசாவடிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளார்கள். மேலும் நமது மாவட்டத்தில் 9 பிரிவு கொரான்டைன் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 700 நபர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி ஆகியவற்றை அளித்திட பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அவர்களை பிரி கொரான்டைன் முகாமில் வைக்கப்பட்டு கொரோனா தொற்று நோய் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று நோய் உறுதி செய்த நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா தொற்று நோய் இல்லாத நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து தனிமைப்படுத்தப்படும். மாவட்டம் நிர்வாகம் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது நமது மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை. இருந்தபோதும் பொதுமக்கள் அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள், கயத்தாறு ஒன்றியம் சரவணபுரம் விலக்கு புதுப்பட்டி முதல் ஆவுடையம்மாள்புரம் வரை தமிழக ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52.36 லட்சம் செலவில் 22 கி.மீ. தூரம் நடைபெறும் சாலை பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. விஜயா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் (கோவில்பட்டி) மரு அனிதா, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சீனிவாசன், திரு.சசிகுமார், கயத்தாறு வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திரு அய்யப்பன், கயத்தாறு ஒன்றிய பொறியாளர் திரு. சங்கர், ஊராட்சி தலைவர் திருமதி செல்வி, கட்டாலங்குளம் ஊராட்சி தலைவர் திரு. தம்பா, முக்கிய பிரமுகர்கள் திரு. செல்வகுமார், கலந்து கொண்டனர். திரு.வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.