தூத்துக்குடி மாவட்டம் : நேற்று காலை சுமாா் 11 மணியளவில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் 3 குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் கோவில்பட்டி மருத்துவருக்குச் சொந்தமான சந்தைப்பேட்டை தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனை, ஸ்கேன் மையம், திருமண மண்டபம், ரத்த வங்கி நிலையம் என பல்வேறு இடங்களின் மேலாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சோதனையானது இரவும் நீடித்தது. மேலும் விவரங்கள் சோதனை முடிவுக்கு வந்த பின்னரே தெரியவரும்.
அதேபோல் தூத்துக்குடி மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை நீண்டகாலமாக கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாளை ரோட்டில் பாலிடெக்னிக் அருகேயுள்ள பிரபல திருமண மண்டபம் சார்பில் ரூ.4,67,761 வரி செலுத்த வேண்டியது நிலுவையில் இருந்துள்ளது. மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டு இருப்பினும் வரி கட்டப்படாமல் இருந்த நிலையில் அந்த திருமண மண்டபத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலூர் பங்களாதெருவில் குடிநீர் கட்டணம் கட்டாத 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
மற்றும் பூசாரிபட்டி கிராமத்தில் ராஜ்குமார் (43) என்பவரது தீப்பெட்டி தொழிற்சாலை கடந்த டிச.31ம் தேதியுடன் ஆலைக்கான உரிமம் முடிந்தும், தற்போது வரை உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்தது ஆய்வில் தெரியவந்தது. அதுமட்டுமில்லாது ஆலையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இருந்த இருப்பு அறைகளில் சுமார் 195 கிலோ குளோரைட் மூட்டைகள், மற்றும் 69 சல்பர் மூட்டைகளை அதிகாரிகள் ஆய்வின்போது பறிமுதல் செய்தனர். எனவே படைக்கல சட்டவிதி 2016ன்படி உரிமம் முடிவடைந்த நிலையில் அபாயகரமான ஆபத்து விளைவிக்க கூடிய பொருட்களை இருப்பு வைத்திருந்ததை தொடர்ந்து அந்த தீப்பெட்டி தொழிற்சாலைக்கும் வருவாய்த்துறையினர் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் தலைமையில் சீல் வைத்தனர்.