கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த 125 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீட்டைவிட்டு வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் உத்தரவிட்டதையடுத்து, கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூர், கழுகுமலை, கயத்தாறு, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் ஆய்வு செய்ததில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 125 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் வகையில், முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களை கண்காணித்து வழக்குப் பதிவு செய்கிறோம். அவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.