தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்படுவதை தடுக்க நடவடிக்கை..

தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  இஸ்ரோவின் சார்பில் உலக விண்வெளி வாரத்தையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நிறுத்தப்பட்டுள்ள குளிர்சாதன வசதி பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் தீபாவளிக்கு பொதுமக்கள் சொந்த ஊர்க்கு செல்ல 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,  ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.