மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகள்

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகள் நேற்றும், இன்றும் நடைபெற்றன. இப்போட்டிகளில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 14 கல்வியியல் கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். முதல் நாளன்று பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பாட்டுப்போட்டி முதலிய கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

இரண்டாம் நாளன்று கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்புடன் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரையாற்றினார். விளையாட்டுப் போட்டிகளைத் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உதவிக்கண்காணிப்பாளர் கலை கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியரும், இப்போட்டிகளின் பல்கலைக்கழகப் பிரதிநிதியுமான சுப்பிரமணியன் நன்றியுரையாற்றினார்.

போட்டிகளில் பெற்றிப் பெற்று ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் வ.உ.சி கல்வியியல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் சிவந்தி கல்வியியல் கல்லூரியும் பெற்றனர். விளையாட்டு மற்றும் கலை இலக்கியப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரிச்செயலர் மற்றும் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் நாகலட்சுமி மற்றும் அனைத்து பேராசிரியைகளும் இணைந்து செய்திருந்தனர்.