திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவிலான ‘தலைவா் தங்கக்கோப்பை’ கிரிக்கெட் போட்டி’ தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் அணி செயலா் பை.மூ. ராமஜெயம் தலைமையில் இன்று தொடங்க உள்ளது.
போட்டிகளில் பங்கேற்க ஏற்கனவே பதிவுசெய்துள்ள 117 அணிகளுக்கு வரும் 7, 8, 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் உமரிக்காடு, நாசரேத், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டல போட்டிக்கு தகுதியானவர்கள், அதில் வெற்றி பெறும் அணிகள் மாநில போட்டியில் விளையாட தகுதியானவர்கள்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு முறையே ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். மதுரை மண்டலப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 5 லட்சம் மற்றும் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.