ரூ.27 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்: கடம்பூர் பேரூராட்சி

கடம்பூர் பேரூராட்சிக்கு பகுதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் முதல் தங்கம்மாள்புரம் வரை 14வது நிதிக்குழு மானியத் திட்டம் நிதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செ.ராஜூ:  புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. 
பொதுமக்கள் சிரமம் இன்றி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை விரிவாக்கம் பணிகளும், போக்குவரத்து இடையூறை குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு விபத்துகள் மற்றும் பொதுமக்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு தொடர்ந்து நிறைவேற்றி கொண்டு வருகிறது. 

மேலும் அவர்களது கோரிக்கைகளை கணிவாக பரிசிலனை செய்து அம்மாவின் அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையான நியாய விலைக்கடைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இன்று 14வது நிதிக்குழு மானியத்திட்டம் நிதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் முதல் தங்கம்மாள்புரம் வரை 820 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் விரைவாக செல்ல முடியும். 
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளும் தொடர்ந்து நிறைவேற்றி வரும் ஒரே அரசு அம்மா அரசுதான் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் கடம்பூர் பேரூராட்சி தலைவர் எஸ்.வி.எஸ்.வி.நாகராஜா, பேரூராட்சி உதவி பொறியாளர் அன்னம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன், முக்கிய பிரமுகர்கள் பாலமுருகன், வாசமுத்து, மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.