அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

அரசு ஊழியர்களுக்கு தினசரி வாழ்வின் ஒரு மாற்றத்தை கொடுத்து புதிய உத்வேகத்தை உருவாக்கவும், குழு மனப்பான்மை, ஒற்றுமை உணர்வை உருவாக்கவும், மாவட்ட நிர்வாகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவும், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வருகிற வெள்ளிக்கிழமை (06.03.2020) அன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடக்கிறது. அதேபோல் பெண்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம், இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு துறையை சேர்ந்த நிரந்தர ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள். தற்காலிக, தினக்கூலி பணியாளர்கள், சீருடை பணியாளர்கள், 6 மாதத்துக்குள் அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 6–ந் தேதி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு தேவையான உடை, உபகரணங்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து சேர வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு விடுப்பு உண்டு. பயணப்படி மற்றும் தினப்படியை தாங்கள் பணிபுரியும் துறையில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461–2321149 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.