தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் அறிமுகம்!!!

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தித் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது: அடுத்த 3 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 5 ஆண்டுகளில் 13,110 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களுக்கு தமிழ்நாட்டின் மின்தேவை திருப்திகரமாக இருப்பதால் இனி மின்வெட்டே இருக்காது. கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் திட்டத் தின் மூலம் 27 ஆயிரம் மின் இணைப்புகளும், இயல்பாக 60 ஆயிரம் மின் இணைப்புகளும் என மொத்தம் 87 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகர் பகுதியில் விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக உள்ளாட்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், அலுவலகத்தில் இருந்தே வீட்டின் மின் அளவீட்டை கணக்கிட முடியும். பணம் கட்டாத பட்சத்தில் மின்சாரத்தை துண்டிக்கவும் முடியும். மின் துறைக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீட்டு கடனாக வாங்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணப்படி, தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று பேசினார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 340 துணை மின்நிலையங்களை அமைத்துள்ளோம். எனவே காற்றாலை மின்சாரம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக பட்சமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு கிடைக்கிறது. ஆனால், திடீரென்று 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துவிடுகிறது. இதை ஈடு செய்ய அனல்மின் நிலையங்களைத்தான் நாட வேண்டியுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தர வேண்டும். ஆனால், 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரத்தை தருகிறார்கள். இதனால், மீதமுள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நாம் காசு கொடுத்து வெளியே இருந்து வாங்க வேண்டியுள்ளது. அதனால், மின்துறைக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது எனவும் கூறினார்.