தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (89) உடல் நலக்குறைவால் காலமானார்!

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ள சிறப்பு மிக்க சமஸ்தானம் சிங்கம்பட்டி. சேர, சோழ பாண்டியர்களுக்கு இணையான பெருமை இதற்கும் உண்டு.

பாண்டியர்களின் வம்சத்தின் கீழ் வரும் ஒரு குறுநில மன்னர்களான சிங்கம்பட்டி ஜமீன்தாரர்களுக்கும் பெருமை உண்டு. சீமராஜா படத்தில் ஒரு சில விசயங்களைப்பற்றி தெரிவித்திருந்தாலும் சிங்கம்பட்டியின் உண்மை முகம் வேறு.

திருநெல்வேலி: உடல் நலக்குறைவால் காலமான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிதான் (89) தமிழகத்தின் கடைசி ஜமீன் ஆவார். இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர் ஆவார்.

இவருக்கு 3 வயதிலேயே ராஜாவாக மூடிசூட்டினார்கள். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள்.

முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்தது சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில்தான் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வந்தார். இவரது குடும்பத்தினர் இதனை நிர்வகித்து வருகிறார்கள்.

74 வருடங்களாக ராஜா
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளித்து வந்தார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்திருக்கிறார். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளார்கள்.

ஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வந்தார் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி.அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் உள்ளன.

சிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர் ஆவர். இவர் நிறைய பொன் பொருட்களை வாரி வழங்கியிருக்கிறார் என்று வரலாறுகள் சொல்கின்றன. அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரில் தான் அழைக்கப்படுகிறது.

மாஞ்சோலை எஸ்டேட் இருக்கும் இடமும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாக இருந்தது. சிங்கம்பட்டி ஜமீனின் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் போது ஜமீனுக்கு மிகப்பெரிய அளவில் பணம் விரயம் ஆனதாம். இதனால் ஏற்பட்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவாகியது என்று சொல்கிறார்கள்.