குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

தூத்துக்குடி மாநகராட்சியில் உட்பட்ட தெர்மல் நகர் அருகே உள்ள 51 வது வார்டு யூரணி ஒத்தவீடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ளவர்கள் உப்பளத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிதண்ணீர் வழங்காததால் அப்பகுதி மக்கள் இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் குடிப்பதற்காக ஒரு குடம் தண்ணி 15 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு, மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.