இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு 2ஆம் தேதி கப்பல் வருவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து கப்பல் மூலம் 02.06.2020 அன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் வருகை தர உள்ளார்கள். இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு பணிகள், பேருந்து வசதிகள் ஆகியவற்றை குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கப்பலில் இருந்து வரும் பொதுமக்கள் இறங்கும் இடங்கள், பின்னர் பேருந்துகள் மூலம் அழைத்து சென்று காத்திருப்பு அறையில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் இடம், உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் இடம் மற்றும் கருவியின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, வருகை தரும் பயணிகளுக்கு தேவையான உணவு வழங்கிடவும்,
குடிநீர் பாட்டில்கள் வழங்கிடவும், தேவையான குப்பை தொட்டிகளை பயன்பாட்டிற்கு வைத்து இருக்கவும், கை கழுவதற்கு ஏதுவாக வாஷ் பேஷன் தற்காலிகமாக அமைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வரிசையாக வருவதை அலுவலர்கள் கண்காணிக்கவும், கூடுதலாக பணியாளர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திடவும், அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின் வருகை தருபவர்களை அழைத்து செல்ல பேருந்துகளை வெளியில் தயார் நிலையில் வைத்துக்கொள்வதோடு தேவையான காவல் துறை பாதுகாப்பு மற்றும் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ், துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார், முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் சுரேஷ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கர நாராயணன், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.மாரியப்பன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், துறைமுக பாதுகாப்பு டெப்டி கண்சர்வேட்டர் பிரவீண் குமார் சிங், டிராபிக் மேனேஜர் பிரபாகர், டெப்டி கமாண்டண்ட் மிஸ்ரா(சி.ஐ.எஸ்.எப்), வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார் மற்றும் துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.