தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்! உடனே தடுத்து நிறுத்த வேண்டும்- சீமான் அறிக்கை!!

தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியிறுத்தி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிபிட்டுள்ளதாவது,

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் 7 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலைசெய்யப்பட்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இக்கொடுஞ்செயல் ஒட்டுமொத்தச் சமூகத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இப்பேர்ப்பட்ட கயவர்களின் மத்தியில்தான் நாமும் வாழ்கிறோமா? என மனச்சான்று உலுக்கியெடுக்கிறது.

குழந்தையை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களின் மீள முடியா பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். இத்தகைய இழிசெயலை செய்த கொடுங்கோலனை கடும் சட்டப்பிரிவின் கீழ் கைதுசெய்து உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.