அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு : கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் : கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சி பைபாஸ் சாலை பகுதியில் காளிராஜ் என்பவருடைய கட்டிடத்தில் சாத்தூர் பழைய டேக் ரோட்டினைச் சேர்ந்த மாதவன் (32) என்பவர் அட்டை கம்பெனி நடத்தப்போவதாக கூறி வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் தயாரிப்பு செய்யப்படுவதாக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் முருகனாந்து தலைமையிலான குழுவினர் அந்த கட்டிடத்தில் ஆய்வு செய்தனர்.


ஆய்வில் அங்கு பேன்சி வெடிகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 170 கிலோ வெடி மருந்து மற்றும் தயாரிக்ப்பட்ட பட்டாசுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சாத்தூர் மேலப்புதூரைச் சேர்ந்த உதயக்குமார் (33), மற்றும் அதே ஊரைச் சேர்ந்த டேனியல் (26) இருவரிடமும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பட்டாசு தயாரிப்பு செய்ய எவ்வித அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.