சாத்தான்குளம் படுகொலை – கோவில்பட்டி நடுவர் மன்ற நீதிபதி பாராதாசன் 7-ஆவது நாளாக இன்றும் விசாரணை

கோவில்பட்டி நடுவர் மன்ற நீதிபதி பாராதாசன், திருச்செந்தூர் அரசினர் விருந்தினர் மாளிகையில் வைத்து இன்று 7-ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் முன்பு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சம்பவத்தன்று செவிலியராக பணிபுரிந்த கிருபை என்பவர் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது செவிலியர் கிருபை, மருத்துவமனைக்கு 2 பேரையும் போலீசார் கூட்டி வந்தபோது இருவருக்கும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் சாத்தான்குளம் நீதிமன்றத்திலிருந்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஜெயராஜையும், பெனீக்சையும் தனியார் வாகனத்தில் அழைத்துச்சென்ற வாகன ஓட்டுனர் நாகராஜ் என்பவரும ஆஜரானார்.

அப்போது அவர், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இருந்து 2 பேரையும் அழைத்து வந்தபோது நல்ல முறையில் நடந்து வரவில்லை என்றும், காலில் அடிபட்டது போல் நடந்து வந்தனர் என்றும், வாகனத்தில் வரும்போது இருவரும் விரைவில் வழக்கறிஞர்கள் மூலம் ஜாமீன் எடுக்க வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அவர்களை கோவில்பட்டியில் இறக்கிவிட்ட போது வண்டியின் பின் சீட்டில் உள்ள பெட்சீட்டில் ரத்தக்கரை இருந்ததாகவும், இதேபோல் சீட்டின் இருக்கையிலும் லேசான ரத்தக் கரை இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.