குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் பாதிப்பு இல்லை: சசிகலா புஷ்பா எம்பி பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு இல்லை என சசிகலா புஷ்பா எம்பி தெரிவித்தார்.


மாநிலங்கவை எம்பி சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக முஸ்லீம் மக்களை தூண்டிவிட்டு வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றன. டெல்லி கலவரத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளே காரணம். இந்த சட்டம் ஏற்கனே பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, அதன் மூலம் வெற்றி பெற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த சட்டம் இருந்தது. பாஜக இதனை முறைப்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர்கூட இந்த சட்டத்தை ஆதரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமரால் உலகத்தில் எந்த செயலையும் செய்ய முடியும் என்று பாராட்டியுள்ளார். இந்த சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேசத்தின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய மக்களை பாதிக்கக்கூடிய எந்த செயலையும் மோடி செய்ய மாட்டார். தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் ஒடுக்கத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனப்படுகொலையின் ரத்தசுவடுகள் காய்வதற்கு முன்பே இலங்கை சென்று, ராஜபட்சேவுடன் விருந்து உண்டவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை குறித்து கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது.

பாரத பிரதமரின் நலத்திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைவதற்காக, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை இனி ஒவ்வொன்றாக கொண்டு வருவோம். இந்தியா தொடர்ந்து மதசார்பற்ற நாடாகவே திகழும். இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்த சட்டத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் யாராக இருந்தாலும் நீதிமன்றம் செல்லலாம் என்று அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, பாஜக மாவட்ட தலைவர்கள் பால்ராஜ், ராமமூர்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், மாவட்ட செயலாளர்கள் ரவிசந்திரன், மான்சிங், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் சிவராமன், மகளிர் அணி தங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.