உப்பு ஏற்றுமதி சரிவு : தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களும் தான் உப்பு உற்பத்திக்கான உச்சக்கட்ட காலமாகும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக உப்பு தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் செல்கிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரிகள் சரியாக ஓடாததாலும், போலீஸாரின் கெடுபிடிகளாலும் தற்போது 25 சதவீத உப்பு மட்டுமே வெளியே விற்பனைக்கு செல்கிறது.  இதனால் உப்பளங்களில் சுமார் 1 லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது. அதுபோல தொழிலாளர்கள் மொத்தமாக வேலைக்கு வர முடியாத சூழ்நிலை இருப்பதால் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு வருகின்றனர். இதனால் ஒரு சில உப்பளங்களில் மட்டுமே வேலை நடைபெறுகிறது. வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் 3 லட்சம் டன் உப்பு வந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு 1.5 லட்சம் டன் அளவுக்கு தான் இருக்கும் என தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் கூறியுள்ளார்