ஊரடங்கால் பாதித்த மாலுமிகள்

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், கப்பல் மாலுமிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுவாக மாதக்கணக்கில் கப்பலிலேயே பயணிக்கும் மாலுமிகள் தங்களது ஒப்பந்த காலம் முடிந்த பின்னர், அவர்களுக்கான மாற்று மாலுமிகள் கப்பலுக்கு வந்து சேர்ந்தவுடன், அங்கிருந்து விமானத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வர். நாடு முழுவதும் ஊரடங்கின் காரணமாக, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், விடுமுறையில் வந்த மாலுமிகள் மீண்டும் கப்பலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கப்பலில் உள்ள மாலுமிகளும் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் விடுமுறைக்கு வீடு திரும்ப முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் கூறியதாவது:-
கப்பல் மாலுமிகள் ஆண்டு முழுவதும் குடும்பத்தை மறந்து பயணித்து வேலை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, புன்னக்காயல், திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் மாலுமிகளாக கப்பல்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் கப்பல்களில் வேலைக்கு செல்வார்கள். தற்போது பெரும்பாலானவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இவர்கள் திரும்பி கப்பல்களுக்கு வேலைக்கு சென்றால்தான், அங்கு பணியாற்றும் மாலுமிகளை விடுவித்து விடுமுறைக்கு அனுப்புவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கால், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக மட்டுமே சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலுமிகள் கப்பல்களுக்கு மீண்டும் பணிக்கு செல்ல முடியாததால், அங்கு பணியாற்றுகின்ற மாலுமிகள் பல மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் தவிக்கின்றனர். உலகை சுற்றும் கப்பல் மாலுமிகளையும் கொரோனா கலங்கடித்துள்ளது. கொரோனா முற்றிலும் ஒழிந்து, மீண்டும் எப்போது விமானங்கள் இயக்கப்படும்? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.