விவசாயிகளுக்கு ரூ. 5.85 கோடி இழப்பீட்டுத் தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரியின் தொடா் முயற்சியால், 2018-19 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் பருத்தி, மக்காச்சோளம் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

2018 -19ம் ஆண்டு பருத்தி பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ. 5.11கோடி இழப்பீட்டு தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பிரிமியம் செலுத்திய 4083 விவசாயிகளுக்கு ரூ.2.21 கோடியும், வங்கி மூலம் செலுத்திய 135 விவசாயிகளுக்கு ரூ.15 லட்சமும், இ-பொது சேவை மையம் மூலம் செலுத்திய 4044 விவசாயிகளுக்கு ரூ.2.75 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 2017 -18 ஆம் ஆண்டு பருத்தி பயிரில் இ-சேவை மையம் மூலம் பயிா்க் காப்பீடு பிரிமியம் செலுத்திய 412 விடுபட்ட விவசாயிகளுக்கு ரூ. 54 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.இது தவிர 2018-19 ஆம் ஆண்டு மக்காச்சோளப் பயிருக்குப் பிரிமியம் செலுத்திய 116 விடுபட்ட விவசாயிகளுக்கு ரூ. 20 லட்சம் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது. நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் விடுவிக்கப்பட்ட இத்தொகை ஒரு வார காலத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.