கரோனா சிறப்பு நிதியுதவி திட்டத்தில் ரூ.8.2 கோடி நிதி வழங்கப்படும் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக தொழில் மேம்பாட்டுக்கு கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டத்தில் ரூ.8.2 கோடி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதிசேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி வட்டாரங்களைச் சார்ந்த 105 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களைச் சார்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற்காகவும் பிறபகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்கிடவும், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் ரூ.300 கோடியில் கரோனா சிறப்புநிதி உதவி தொகுப்புத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.05.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

அந்த சிறப்பு நிதி உதவித் தொகுப்பின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.8.2 கோடி மதிப்பில் 2,512 பயனிளாகள் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்புநிதி உதவித் தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 840 நபர்களுக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.4.20 கோடி நீண்ட கால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். மேலும், 42 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள1,050 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.63 லட்சம் வழங்கப்படும். குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 8 தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி, கலைப்பொருட்கள் உற்பத்தி போன்றவை) தலா(5 நபர்கள்) ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் ஒருமுறை மூலதனமானியமாக வழங்கப்படும்.

புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன்பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம மொத்தம் ரூ.1.67 கோடி நீண்ட கால கடனாக வழங்கப்படும். ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு/உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 500 நபர்கள் வீதம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக 808 நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20,000/- என்ற அடிப்படையில் நிதி வழங்குவதற்காக மொத்தம் ரூ.126.5 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும். மேற்கண்ட பயன்களைப் பெற இத்திட்டத்தின் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், இவற்றை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஊரகப் புத்தாக்கத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், பீச் ரோடு, பழைய தாலுகா அலுவலகம் (மத்திய காவல் நிலையம் மாடியில்) தூத்துக்குடி – 628001 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.