ரூ.75 லட்சம் மதிப்பில் சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டிடம்: திருச்செந்தூர் ஊராட்சி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டிடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் அடிக்கல் நாட்டி பூமி பூஜையில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தாவது: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இருப்பிடத்திற்கு அருகிலே பகுதி நேரம் அல்லது முழு நேரம் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 20 ஊராட்சி பகுதிகளில் ரூ.14.82 கோடி மதிப்பில் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம் கட்டப்பட உள்ளது. இன்று திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.60 லட்சமும், ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ரூ.15 லட்சமும் என மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பில் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம் கட்டப்பட உள்ளது. 


இன்று இதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. விரைவில் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 ஊராட்சிகளில் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடத்திற்கான பணிகள் துவக்கப்பட உள்ளது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன், உதவி செயற்பொறியாளர் கவுதமன், திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தோஷ், ராமராஜ், அம்மன்புரம் ஊராட்சி தலைவர் ஞானராஜ், துணைத்தலைவர் விக்னேஷ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரவிசந்திரன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், குணசேகரண், திருப்பாற்கடல், விஜயகுமார், பாப்பாதி, பேபி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.