கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் நீதி : தி.மு.க

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தை திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக திருச்செந்தூர் தொகுதி பேரவை உறுப்பினா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியரிடம் வழங்கினாா்.

மேலும் அவர், ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் : நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 25-ம் தேதி முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் மயிலப்புரத்தை சேர்ந்த வீரபாகுமூர்த்தி தலைமையில் 15 பேர் காசி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தனர். தற்போது அவர்கள் பீகார் மாநிலம் கயா பகுதியில் தங்குவதற்கு வழியின்றி பரிதவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஊர் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும் ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் மீன்பிடிக்கவும், அதனை விற்பனை செய்யவும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.