மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா உதவி தொகையாக ரூ1000 வழங்கும் நிகழ்ச்சி: கயத்தாறு

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு தாலூகா அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக ரூ1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கினார். மாவட்டத்தில் 36,267 மாற்றுத்திறனாளிகளுக்கு 3கோடியே 62லட்சத்து, 67 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், ப்ரியா,‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர் பிரம்மநாயகம் , முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையெடுத்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்கள் 700 பேர் வரும் 28ந்தேதி இந்திய கப்பல் படை கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகின்றனர். இதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் மத்தியரசிடம் வலியுறுத்தி எடுத்துள்ளார். துறைமுகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் சுய ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 84 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா நிவாரண தொகையாக ரூ.1,000 வழங்கினார்கள். பின்னர் இரண்டாம் கட்டமாக தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புசரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு கொரோனா நிவாரண தொகை இரண்டாம் கட்டமாக வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தார்கள் இதனை உடனடியாக பரிசீலனை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை பெற்ற 1335219 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் 19 நிவாரண தொகை ரூ. 133.52 கோடி வழங்க உத்தரவிட்டு வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள 36,267 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 62 லட்சத்து 67 ஆயிரம் ரொக்காமாக அவரது இருப்பிடத்திற்கு சென்று வருவாய் துறை அலுவலர்கள் மூலம் நேரில் வழங்கப்பட்டு உள்ளது. கயத்தாறு வட்டத்தில் உள்ள 2446 மாற்றுத்திறனாளிகள், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 7,703 மாற்றுத்திறனாளிக்கு என மொத்தம் சுமார் 10,000 மாற்றுத்திறனாளிக்கு கோவிட் 19 நிவாரண தொகை வழங்ப்பட உள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், இசை கலைஞர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் சமுதாயத்தில் பின்தங்கிய பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்