மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற ஆடிட்டர் கைது

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சண்முகம் (59) எ‌‌ன்பவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்து ஓய்வுபெற்று விட்டார். அவரது மகன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தால், தனது மகனுக்கு மின்சார வாரியத்தில் இளநிலை என்ஜினீயர் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி, மின்சார வாரியத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்ற சேலத்தை சேர்ந்த தேவராஜன் (60) என்பவரிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் வேலையும் வாங்கி கொடுக்காமல், ரூ.23 லட்சத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் சண்முகம் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். இதனை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்த துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நேற்று தேவராஜை போலீசார்கள் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.