சாலையை சீரமைக்க வேண்டுகோள் : தூத்துக்குடி

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து செல்லும் திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலையாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் அந்த சாலை பலத்த சேதமானதால் பொதுமக்கள் மிகவும் சிரமபட்டனர். இதனைக் கண்டித்து டிஒய்எப்ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போரட்டம் நடந்தியதையடுத்து சாலையில் கிரஷர் மணல் மூலம் பள்ளங்களை நிரப்பி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனால், தற்காலிக சாலை அமைத்து பல மாதங்களாகியும் அந்த சாலை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. அந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது கிரஷர் தூசி கிளம்பி புகை மண்டலமாக மாறி வருகிறது. இதனால் பயணத்திற்கு சிரமமாக இருப்பதோடு மக்களுக்கு சுவாசக் கோளாறு, தொண்டை வலி  போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் கேட்டபோது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைத்த பின்னர் சாலை சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த திட்டங்கள் நிறைவேற இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால், கிரஷர் தூசியிலிருந்து மக்களை பாதுகாக்க தற்காலிகமாக அந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.