கருங்குளத்தில் 1,680பேருக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், என மொத்தம் 1,680 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,680 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30.05.2020) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, செக்காரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 நபர்களுக்கும், வல்லநாடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 நபர்களுக்கும், வசவப்பபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 நபர்களுக்கும், அனவரதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 400 நபர்களுக்கும், நட்டார்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 நபர்களுக்கும், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 130 நபர்களுக்கும் என மொத்தம் 1,680 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

கோவிட் 19 என்ற கரோனா வைரஸ் உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் பாரத பிரதமர் சுய ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் , ஒவ்வொரு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து காணொலி காட்சி மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்றைய தினம் 29.05.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 6வது முறையாக கொரோனா தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ குழுவினர்களுடன் காணொலி காட்சி மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 27 நபர்கள் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 26 நபர்கள் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். சுய தளர்வுகள் அறிவித்த பின் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் போன்ற மாநிலத்தில் இருந்து வருகை தந்த நபர்களில் 142 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. நமது மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 10,943 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 199 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 20 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது, தினம்தோறும் நமது மாவட்டத்தில் இருந்து சுமார் 20 முதல் 30 நபர்கள் வரை பூரண குணம் பெற்று வீடு திரும்பும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு சுய ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளாக உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், குடிநீர், பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் இன்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கப்பெற்று வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே முககவசங்கள் அணிந்து வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசு சுய ஊரடங்கு பிறப்பித்த சில நாளிலே உணவு தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நலன் கருதி கரோனா நிவாரண தொகை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு தீப்பெட்டி தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரக பகுதியில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் ஏசி இல்லாத நகைகடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் தொழிற்சாலைகளாக இருந்தாலும் சரி, எந்தவிதமான கடைகளாக இருந்தாலும் சரி முழுமையாக விதிமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும். தமிழக அரசு வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதிராஜேந்திரன், துணைத்தலைவர் லட்சுமணப்பெருமாள், அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க மாநில தலைவர் கிருஷ்ணபிள்ளை, மாவட்ட தலைவர் விஜில் எம்.ராஜா, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன்,

கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், சுப்புலட்சுமி, வல்லநாடு ஊராட்சி தலைவர் சந்திரமோகன், ஊராட்சி கவுன்சிலர் முத்துராமலிங்கம், கீழபுத்தநேரி ஊராட்சி தலைவர் ஜெயபாரதி, ஊராட்சி கவுன்சிலர்கள் பொன்ராஜ்கந்தசாமி, சுடலைமுத்து, மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், கோபாலகிருஷ்ணன், அண்ணாமலை மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.