சுப்ரீம் கோர்ட்டு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த டிசம்பர் 12-ந் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அந்த மசோதா சட்டமானது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்கள், நாடு முழுவதும் பரவியது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்க அமைதி கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து மனுக்களிலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மேலும், “இந்த சட்டம், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. இந்த சட்டத்தின் பலன் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கிற நிலையில், முஸ்லிம்களுக்கு மறுப்பது வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டும் நோக்கத்துடன் உள்ளது. இது சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. மதத்தின் அடிப்படையில் விலக்கு அளிப்பதின் மூலம், சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு பிரிவினருக்கு குடியுரிமை அளிப்பதை இந்த சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது” என்றும் அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் 18-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டமானது, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா? என்பதை பரிசீலிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு, இந்த மனுக்கள் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு தொடர்பான 143 மனுக்களும் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், “கடந்த டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது 60 மனுக்கள் மீது மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது 83 மனுக்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த கூடுதல் மனுக்கள் மீது பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், இந்த விவகாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் என்றும், எனவே புதிய மனுக்களை அனுமதிக்காமல் யாரெல்லாம் இந்த வழக்கில் இணைய வேண்டுமோ அவர்களின் இடையீட்டு மனுக்களை அனுமதிக்கலாம் என்றும் கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “அதிகமான அளவில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எந்தெந்த அம்சங்களின் அடிப்படையில் இந்த சட்டம் எதிர்க்கப்படுகிறது என்ற பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்றும், இந்த பொறுப்பை மூத்த வக்கீல் கபில்சிபல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் பட்சத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கீடு தொடர்பான பணிகளை மேலும் 3 மாதங்கள் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீலான விகாஸ் சிங் வாதாடுகையில், இந்த திருத்த சட்டம் அசாம் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும், வங்காளதேச நாட்டினால் அசாம் மாநிலத்துக்கு பிரச்சினை இருப்பதாகவும் கூறினார்.

அதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், “அசாம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அதை தனியாக விசாரிக்க வேண்டும். இந்தியாவின் தலைமை பதிவாளர் அந்த மாநிலத்தின் மக்கள் தொகை பட்டியலை இறுதி செய்யும் வரை அசாம் மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு செயல்பாட்டுக்கு வராது” என்றார்.

இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் வாதாடுகையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணி நடைபெறும் சமயத்தில் யாருடைய குடியுரிமை தன்மையாவது சந்தேகத்துக்கு உள்ளாகும் போது அது பலவகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், இதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அமல்படுத்துவதை ஒத்திவைப்பது என்பது இந்த சட்டத்துக்கு தடை விதிப்பதாக அர்த்தம் ஆகாது என்றும் அவர் கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அமல்படுத்துவதை ஒத்திப்போட முடியாது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீலான ஏ.எம்.சிங்வி வாதாடுகையில், “இந்த சட்டம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படுவதற்கு முன்பே உத்தரபிரதேச அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இது தொடர்பான விதிமுறைகள் ஏதும் இன்றி, உத்தரபிரதேசத்தில் 19 மாவட்டங்களில் இதுவரை 40 லட்சம் மக்கள் சந்தேகத்துக்கு உரியவர்களாக குறிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் அவர்களுடைய ஓட்டுரிமை பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த சட்டத்துக்கு தடை விதிப்பதால் நாட்டில் ஏற்படும் அமளிகளும், பாதுகாப்பற்ற சூழலும் தடுக்கப்படும்” என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று கூறினார்கள்.

அத்துடன், அனைத்து மனுக்கள் மீதும் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் நிலவும் விசேஷமான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அந்த மாநிலங்கள் தொடர்பான மனுக்களை தனியாக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை ஐகோர்ட்டுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.