15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கியது…

நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும் ஊரடங்கை நீடிக்க திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்ததையொட்டி வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கவுன்ட்டா்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் எனவும் இரயில்வே துறை தகவல் அளித்துள்ளது.