நீதியை நிலைநாட்டுகிறது சிபிசிஐடி : உயர்நீதிமன்றம் புகழாரம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புகழாரம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர் எனவும் அறிவுறுத்தியது.

அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி ஜெயராஜ் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தது. மேலும் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷை கைது செய்தது. பின்னர், தலைமறைவாக இருந்த உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை கைது செய்தது. மேலும், நள்ளிரவில் சேசிங் செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, தலைமை காவலர் ரேவதிக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்து ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை புகழாரம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தலாம் என உத்தரவிட்டனர். மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் ஐகோர்ட் நீதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறித்த அச்சத்தை நீதிபதிகள் போக்கினர். இதனைத் தொடர்ந்து பெண் காவலர் ரேவதி வீட்டிற்க்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்பிற்க்காக நிறுத்தப்பட்டுள்ளனர்