அரசு விதிமுறைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா் ஆகிய இடங்களில் மகளிா் சுயஉதவிக் குழு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசம், சோப்பு ஆயில், லைசால், கை கழுவும் திரவம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய விற்பனை அங்காடி திறப்பு விழா  மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கழுகுமலை), பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜோதிபாஸ் (கயத்தாறு), முருகன் (கழுகுமலை), மாதவன் (கடம்பூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு  செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:-இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட கரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மக்கள் தனித்து இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் அதை பின்பற்றுவதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதை மக்களுக்கு எடுத்துக்கூறுவதற்காக ஊடகங்களும் தினமும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு தான் மிக அவசியம் என்றாா்.