குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் : தூத்துக்குடி

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர் இம்தாத்துல்லாக் தலைமையில் நடந்தது. சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டம் மட்டும் அல்ல.  இது அடிப்படை அரசியல் அமைப்புக்கு எதிரான சட்டம் ஆகும். அரசியல் அமைப்பை காப்பதற்காகவே தற்போது இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக எந்த ஒரு ஆவணமும் கோரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இதனை தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்று கூறி உள்ளனர். இது நமது முதல் வெற்றி. இந்த போராட்டம் மண்ணுக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.