தென்திருப்பேரையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென்திருப்பேரை குரங்கணி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, மாவடிப்பண்ணை ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்

கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளிவருவதையும், வெளியில் இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அவர்களது உறவினர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ய வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கிட வேண்டும் எனவும், கொரோனா தொற்று உள்ள நபர்களின் வீடுகளில் பெயிண்ட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிருத்திவிராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்ரியா, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.கிருஷ்ணலிலா, ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி, மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.