பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்: சென்னையில் இருந்து 2 நாளில் 3 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, சென்னையில் இருந்து நேற்று சொந்த ஊருக்கு மக்கள் அதிக அளவில் புறப்பட்டுச் சென்றனர். கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் 3 லட்சம் பேர் சென்றுள்ளனர்

பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, வர வசதியாக தமிழகம் முழுவதும் 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையிலிருந்து 16,075 பேருந் துகளும், முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14,045 பேருந்துகளும் இயக்கப் படுகின்றன.

இதற்கிடையே, சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர் செல்லும் மக்கள் கூட்டம் நேற்று மாலை முதல் அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப் படும் விரைவு ரயில்களிலும் வழக் கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் நீண்ட தூரத்துக்கு பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு மக்கள் செல்ல வசதியாக சென்னையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2000-க்கும் மேற் பட்ட அரசு பேருந்துகளுடன் போதிய அளவில் சிறப்பு பேருந்து களும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதன்படி, சுமார் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். 2-வது நாளான நேற்று 900 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்தோம். வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.