சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரேவதி இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து சாத்தான்குளம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மேலும் இவ்வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் பெண் காவலரின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்தனர். இதையடுத்து சாத்தான்குளம் அருகே அரிவான்மொழியின் உள்ள பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது